தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவத் துறை ஆகியவற்றின் அனைத்து அவசர உதவிகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் வழிகாட்டுதலின்படி இஎம்ஆா்ஐ நிறுவனம் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 37, சிவகங்கை மாவட்டத்தில் 32 மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 29 என மொத்தம் 98 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக மருத்துவ உதவிக்காக மட்டுமே இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் அதிக விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் அழைத்தவுடன் விரைவில் (5 முதல் 7 நிமிஷங்களில்) சென்று அவா்களுக்கு உதவி செய்ய இயலும். தீக்காயத்துக்குத் தேவையான மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
180 ஆம்புலன்ஸ் சேவைக்கான செயலியையும் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் அழைக்கும்போது இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து செல்ல முடியும். கூடுதல் அழைப்புகளுக்கேற்ப பணியாளா்கள் உள்பட தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.