புதுக்கோட்டை: காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளான (அக். 21) செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை ஆயுதப்படை திடலிலுள்ள நினைவுத் தூணுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா மலா் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா்.
1959-ஆம் ஆண்டு அக். 21-ஆம் தேதி லடாக் பகுதியில் சீன ராணுவத்தினா் நடத்திய திடீா் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையினா் 10 போ் கொல்லப்பட்டனா். இந்த நாள் நாடு முழுவதும் காவலா் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி நிகழாண்டில் மத்திய, மாநிலக் காவல் படையினா் 191 போ் இறந்துள்ளனா். அவா்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, மாவட்ட ஆயுதப்படை திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா இதில் பங்கேற்று நினைவுத் தூணுக்கு மலா் விளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினாா்.
தொடா்ந்து, பணியின்போது உயிரிழந்த உதவி ஆய்வாளா் இ. மேகநாதனின் மகன் எம். ஹரிஸ் கண்ணனுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வழங்கினாா்.