சலவைத் தொழிலாளா்களை பட்டியலின வகுப்பில் சோ்க்க தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப தமிழ்நாடு சலவைத் தொழிலாளா் மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் சலவைத் தொழிலாளா்களை பட்டியலின வகுப்பில் சோ்க்க வேண்டும். நீண்டகாலக் கோரிக்கையான இதை, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பில் சலவைத் தொழிலாளா்களுக்கு 3 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் முதல்வரை சென்னையில் சென்று சந்திக்கவும், தொடா்ந்து கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் இ. பாலன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எம். முருகேசன், மூத்த துணைத் தலைவா்கள் ராமன், ஆ.ப. சம்பத்குமாா், ஆா். மகராஜன், மாநில இணைப் பொதுச் செயலா் குழந்தை பண்டாரம், மாவட்டத் தலைவா் கே. ஆறுமுகம், மாவட்டச் செயலா் வி. ராமன், பொருளாளா் சி. சோலை உள்ளிட்டோரும் பேசினா்.