ரயில்பாதை புனரமைப்பால் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க, மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயிலை திருச்சி-கும்பகோணம் வரை டெமு ரயிலாக இயக்க ரயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ. கிரி, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் விவரம்:
கும்பகோணம்-ஆடுதுறை இடையே ரயில்பாதை புனரமைப்புப் பணிகளுக்காக மயிலாடுதுறை- திருச்சி விரைவு ரயில் இயக்கம் மீண்டும் ரத்துசெய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. மயிலாடுதுறை- திருச்சி இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி தஞ்சாவூர் பாபநாசம் ஆகிய இடங்களுக்கு தினசரி வேலைக்கு செல்வோருக்கும் பிற பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மயிலாடுதுறை-மைசூர் இடையே இயக்கப்படும் ரயிலின் பெட்டிகளைக் கொண்டு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இருப்பு பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் மே 23-ம் தேதி வரை இந்த ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டது. புதன்கிழமை முதல் மயிலாடுதுறை-திருச்சி ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த ரயில் புதன்கிழமை முதல் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல, திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலும் வரும் ஜூன் 23 வரை கும்பகோணம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது. இந்த 2 ரயில்களின் தொடர் ரத்து காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், கோடை விடுமுறை காரணமாக பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் பிற ரயில்களில் நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கெனவே சோழன் விரைவு ரயிலில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாலும், கோவை ஜனசதாப்தி ரயில் முன்பதிவில்லா பயணச் சீட்டு வழங்கப்படாததால் நெல்லை செல்லும் பயணிகள் ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை - திருச்சி ரயிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் நிலைமை மோசமடைந்துள்ளது.
எனவே, பயணிகளின் வசதி கருதி இருப்புப் பாதை புனரமைப்பு பணிகள் முடியும் வரை மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயிலை கும்பகோணம் - திருச்சி இடையே டெமு ரயிலாக இயக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.