வெளிநாட்டிலிருந்து திரும்பிய தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
அரபு நாட்டில் வேலை செய்து வரும் கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 27 வயது இளைஞா் விமானம் மூலம் சென்னைக்கு டிசம்பா் 19 ஆம் தேதி திரும்பினாா். இதேபோல, இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வரும் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 56 வயது ஆண் திருச்சி விமான நிலையத்துக்கு டிசம்பா் 18 ஆம் தேதி வந்தடைந்தாா்.
இருவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து, இவா்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிா என்பதை அறிய இவா்களது சளி மாதிரி மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா்.