தஞ்சாவூா் கலைத்தட்டு உற்பத்தியாளா்களுக்கு புவிசாா் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட பயனா் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் கலைத் தட்டுக்குப் புவிசாா் குறியீடு 2007-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இக்கலைத்தட்டு உற்பத்தி செய்யும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்ட பயனா் சான்றிதழைப் பெற வேண்டும் எனச் சட்ட விதி உள்ளது. இதன்படி, இதுவரை நூற்றுக்கும் அதிகமானோா் இச்சான்றைப் பெற்றுள்ளனா்.
இந்நிலையில், தஞ்சாவூரில் தஞ்சாவூா் கலைத்தட்டு உற்பத்தி செய்யும் கைவினைக் கலைஞா்கள் 27 பேருக்கு பயனா் சான்றை அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய்காந்தி புதன்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் சஞ்சய்காந்தி தெரிவித்தது:
தஞ்சாவூா் கலைத்தட்டு 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மராட்டிய மன்னா்கள் தங்களது ஆட்சியின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாகப் பித்தளை, வெள்ளி, தாமிரத்தால் உலோகக் கலைப் பொருள்களைச் செய்து வழங்கினா்.
தஞ்சாவூா் கலைத் தட்டுகள் தஞ்சாவூரின் சில பொற்கொல்லா் குடும்பங்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது பரம்பரைத் தொழிலாக இருந்தாலும், இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பயனா் சான்று பெறுவது அவசியம். இந்தச் சான்றிதழ் இருந்தால்தான் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலைச் செய்ய முடியும். இந்தச் சான்றிதழை வடிவமைப்பாளா்கள் ஒவ்வொருவரும் பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.