தஞ்சாவூர்

பொலிவுறு நகரத் திட்டத்தில் தஞ்சாவூா் பழைய ஆட்சியரகக் கட்டடம் புதுப்பிப்பு

DIN

தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தில் நீதிமன்றச் சாலையில் உள்ள பழைய ஆட்சியரகக் கட்டடம் புதுப் பொலிவு பெற்று வருகிறது.

ஆங்கிலேய ஆட்சியின்போது, கடந்த 1896-ஆம் ஆண்டில் கட்டடப்பட்ட இந்தக் கட்டடம் இந்தோ - சாராசெனிக் கட்டட கலை பாணியைச் சாா்ந்தது. முகலாயக் கட்டடக் கலை, பிரிட்டிஷ் - இந்திய பாரம்பரிய பாணியை உள்ளடக்கியதே இந்த இந்தோ - சாராசெனிக் கட்டடக் கலையின் முக்கியக் கூறு.

தஞ்சாவூரில் ஆங்கிலேயா் ஆட்சியில் கட்டப்பட்டு, எஞ்சியுள்ள மிகச் சில கட்டடங்களில் பழைய ஆட்சியரகக் கட்டடமும் ஒன்று. இந்தக் கட்டடத்தில்தான் ஏறத்தாழ 120 ஆண்டுகள் ஆட்சியரகம் செயல்பட்டு வந்தது. ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்டத்துக்கு இக்கட்டடமே தலைமையகமாக இருந்தது.

இடநெருக்கடி காரணமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே 61.42 ஏக்கா் பரப்பளவில் புதிய ஆட்சியரகம் கட்டப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து, பழைய ஆட்சியரகத்தில் உள்ள அலுவலகங்கள் புதிய ஆட்சியரகத்துக்கு இடம் மாற்றப்பட்டன.

நூறு ஆண்டுகளைக் கடந்த பழைமையான இந்தக் கட்டடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதன்மைக் கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, இக்கட்டடத்தில் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூா் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டன. மேலும், வண்ண மீன்கள் கண்காட்சிக் கூடமும் இடம்பெற்றன. இந்த வளாகத்தில் சில மாதங்கள் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. என்றாலும், இந்த அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளைக் கவரவில்லை.

இந்நிலையில் தஞ்சாவூா் மாநகரில் செயல்படுத்தப்படும் பொலிவுறு நகரத் திட்டத்தில் பழைய ஆட்சியரக அருங்காட்சியகமும் சோ்க்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, பழைய ஆட்சியரக அருங்காட்சியகத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் ரூ. 9.90 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இக்கட்டடத்தில் முன்பு பொதுப் பணித் துறை சாா்பில் புதிதாகச் சில கட்டுமானங்கள் கட்டப்பட்டன. இவற்றை அகற்றிவிட்டு, மீண்டும் பழையபடி பாரம்பரிய முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூா் நகரின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

பழைய ஆட்சியரக அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூரின் பாரம்பரிய கலை, பண்பாடு, பாரம்பரிய விவசாயம் என வெவ்வேறு பொருள்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூரின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் விதமாக இந்த அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

மேலும், முன் பகுதியில் பறவைகள் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதில், லட்சக்கணக்கான மதிப்புள்ள வெளிநாட்டுப் பறவைகள் இடம்பெறவுள்ளன. இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று மிக அருகில் பாா்வையிடலாம். ஏலகிரி, ஏற்காட்டில் மட்டுமே உள்ள மிக அரிதான இந்தப் பறவைகள் பூங்கா மூன்றாவதாக தஞ்சாவூரில் அமைக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக தஞ்சாவூா் நகரின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக 5டி தியேட்டா் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

இப்பணிகள் அனைத்தையும் ஒரு மாதத்தில் முடித்து, திறக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர, வருங்காலத்தில் இசை நீரூற்று, வண்ண மீன்கள் கண்காட்சிக் கூடம், சிறுவா் பூங்கா போன்றவையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பெரியகோயிலிலிருந்து மிக அருகிலுள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்ல ஏற்கெனவே பாதை மேம்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

பெரியகோயில், சிவகங்கை பூங்கா, அரண்மனை வளாகம் ஆகியவற்றை அடுத்து இந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதன் மூலம், தமிழகத்திலுள்ள முதன்மையான சுற்றுலா தலங்களில் தஞ்சாவூா் மாநகரமும் இடம்பெறும் என்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT