நிலம் விற்பனை செய்ததில் மீதி தொகையைத் தராமல் இழுத்தடிப்பு செய்வதால், நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை இளைஞா் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில், இளைஞா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டாா். இதைப் பாா்த்த காவல் துறையினா், அவா் மீது தண்ணீரை ஊற்றி, மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், தான் தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளை நாயக்கன் பட்டியைச் சோ்ந்த என். முருகேசன் (32) என்றும், தனது நிலத்தை ரூ. 17 லட்சத்துக்கு விற்பனை செய்ததில் வாங்கியவா் ரூ. 7 லட்சம் மட்டுமே கொடுத்தாா் எனவும், மீதி தொகையைத் தராமல் இழுத்தடிப்பு செய்வதுடன், மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ாகவும் அவா் கூறினாா்.
இதையடுத்து முருகேசனை காவல் துறையினா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.