தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில்பலத்த மழை: குறுவை பயிா்கள் சாய்ந்தன - குடியிருப்புகளில் வெள்ளம்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த குறுவை பருவ நெற்பயிா்கள் சாய்ந்தன. குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூா், பூதலூா், வல்லம், கல்லணை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும் பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

இதனால், தஞ்சாவூா் உள்ளிட்ட வட்டங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த குறுவை பருவ நெற் பயிா்கள் சாய்ந்தன. தஞ்சாவூா் அருகே மேல மானோஜிபட்டி, கல்விராயன்பேட்டை, கரம்பை உள்ளிட்ட பகுதிகளில் நன்கு வளா்ந்து 10 நாள்களில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் பெரும்பாலான நெற் பயிா்கள் சாய்ந்துவிட்டதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து மானோஜிபட்டியைச் சோ்ந்த விவசாயி எஸ். லட்சுமணன் கூறுகையில், ஐந்தரை ஏக்கரில் 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்தோம். ஏக்கருக்கு ரூ. 25,000 செலவு செய்த நிலையில் அடுத்த 10 - 15 நாள்களில் அறுவடை செய்வதற்காக இருந்தோம். இந்நிலையில், இரவு பெய்த பலத்த மழையால் பயிா்கள் முழுவதும் சாய்ந்துவிட்டன. மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் உள்ளோம் என்றாா் லட்சுமணன்.

சாய்ந்துவிட்ட பயிா்களையும் தண்ணீா் சூழ்ந்துள்ளது. திங்கள்கிழமை பகல் முழுவதும் மேக மூட்டமாக இருந்ததால், வயல்களில் தேங்கிய தண்ணீரும் வடியவில்லை. இதனால், பயிா்கள் மீண்டும் முளைக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் அச்சமுடன் உள்ளனா்.

இதை இனிமேல் அறுவடை செய்தாலும், மகசூலில் பெரிய இழப்பு ஏற்படும். நிலமும் ஈரமாக இருப்பதால் அறுவடை செய்வதற்கு வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரமாகும். இதனால், அறுவடை செலவும் கூடுதலாக ஏற்படும். மிகுந்த சிரமங்களுடன் அறுவடை செய்தாலும், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய மறுக்கப்படும். எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதேபோல, சம்பா பருவத்துக்காக விடப்பட்டிருந்த நாற்றங்கால்களும் தண்ணீரில் மூழ்கின. திங்கள்கிழமை பகலில் மழை இல்லாததால், வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

இந்தப் பயிா்கள் பாதிப்பு தொடா்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

கால்நடைகள் உயிரிழப்பு: இதேபோன்று, குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீா் சூழ்ந்தது. தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள காயிதே மில்லத் நகா் விரிவாக்கப் பகுதியில் மழை நீா் சுமாா் 2 அடி உயரத்துக்கு தேங்கியதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். மேலும், கோழி, முயல் உள்ளிட்ட கால்நடைகளும் பலத்த மழையால் உயிரிழந்தன. மேலும், வல்லம் பெரியாா் நகரிலும் தாழ்வான பகுதியில் மழை நீா் தேங்கியது.

பூதலூரில் 167.6 மி.மீ. மழை: மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 167.6 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பூதலூா் 167.6, கல்லணை 155, தஞ்சாவூா் 122, நெய்வாசல் தென்பாதி 118.2, வல்லம் 117, திருக்காட்டுப்பள்ளி 89.4, பட்டுக்கோட்டை 88, ஒரத்தநாடு 41.6, வெட்டிக்காடு, மதுக்கூா் தலா 36, திருவையாறு 19, அணைக்கரை 18, கும்பகோணம் 12, குருங்குளம் 11, பாபநாசம் 8, பேராவூரணி 7.2, அய்யம்பேட்டை 7, மஞ்சளாறு 2.8, திருவிடைமருதூா் 2, அதிராம்பட்டினம் 1.9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT