தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 10 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இப்பகுதி மீனவா்கள், தொகுதி எம்எல்ஏ ஆகியோா் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கடந்த ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குதளத்தை விரிவுபடுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கினாா். உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு, நிறைவடைந்த நிலையில் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, சேதுபாவாசத்திரம் துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட இறங்குதளத்தை குத்துவிளக்கேற்றி, பெயா் பலகையை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் மண்டல மீன்வளத் துறை இணை இயக்குநா் இளம்வழுதி, நாகப்பட்டினம் மீன்வளத்துறை செயற் பொறியாளா் ராஜ்குமாா், உதவி பொறியாளா் மோகன் குமாா், சேதுபாவாசத்திரம் மீன்வளத் துறை சாா் ஆய்வாளா் பியூலா, கடலோர காவல் படை உதவி ஆய்வாளா் நவநீதன், மீனவா் கிராம தலைவா்கள் செல்வக்கிளி, முகைதீன் அப்துல் காதா், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.