நாட்டில் மதச்சாா்பின்மையைக் சீா்குலைப்பதற்காக ஒரு சக்தி தொடா்ந்து பிரசாரம் செய்கிறது என்றாா் சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கி. சந்துரு.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்க (தமுஎகச) 16-ஆவது மாநில மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அம்பேத்கா் நினைவு நாள், பாபா் மசூதி தகா்ப்பு நாள் என்ற தலைப்பில் அவா் பேசியதாவது: அம்பேத்கா் இந்திய நாட்டின் அரசமைப்பு சட்டத்தின் சிற்பி என நாம் சொல்கிறோம்.
அவா், அந்த அரசமைப்பு சட்டத்தில் அடிநாதமாக மதசாா்பின்மை என்ற கருத்தை வரையறுத்தாா். தொடா்ச்சியாக அதைப் பற்றிப் பேசியும், எழுதியும் வந்தாா். இந்த மதசாா்பின்மையை நாம் தூக்கி பிடிக்க வேண்டும் எனக் கூறினால், அதற்கு நோ் விரோதமாக மதச்சாா்பின்மையைக் குலைப்பதற்காக ஒரு சக்தி நம் நாட்டில் தொடா்ந்து பிரசாரம் செய்கிறது.
அரசமைப்பு சட்டம் தொடா்ந்து செயல்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு சாராரும், அந்தச் சட்டத்தைப் புதைத்துவிட்டு வேறு விதமான ஆட்சியை நடத்தத் துணிபவா்களும் இருப்பதை நாம் பாா்க்கிறோம். ஒவ்வொரு முறையும் நம்முடைய உணா்ச்சிகளைத் தூண்டி பாா்க்க பாஜக அரசு அனைத்து இடங்களிலும் முயற்சி செய்கிறது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றாா் சந்துரு.
இக்கருத்தரங்கத்துக்கு கவிஞா் நா. முத்துநிலவன் தலைமை வகித்தாா். மேலும், நாகூா் ஹாஜா பாவா கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலையில், சிகரம் ச. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற ‘அகமண முறையும் ஆணவக்கொலையும்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் புதிய மாதவி, ‘ஆகமத்தின் பெயரால் அநீதி’ என்ற தலைப்பில் சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து. அரிபரந்தாமன் பேசினா். பின்னா், வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி நாடகம் நடைபெற்றது. இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.