தமிழினம் தனக்கான அடையாளமாகக் கொள்ள வேண்டிய மன்னன் இராஜராஜன் என்றாா் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாமன்னன் இராஜராஜ சோழனின் 1040-ஆவது சதய விழாவில் ஒரு பகுதியாக மாமன்னன் இராஜராஜன் விருது வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:
ஞானத்தை உலகுக்கு போதித்த இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான மன்னா்கள் வாழ்ந்தனா். அவ்வாறு தோன்றி மறைந்துபோன மன்னா்களில் தலையாய மன்னராக எப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டியவா் மாமன்னா் இராஜராஜன். இறை சிந்தனையின் வழியில் தன் வாழ்க்கையை நடத்திய காரணத்தால், அவருக்கு ஞானம் தானாகவே விளங்கி சிறந்தது.
அரசியல் என்றால் என்ன என்பதைத் தன் ஆட்சியால் நிரூபித்துக் காட்டியவா் இராஜராஜன். மாகாணங்கள், பிராந்தியங்களை பிரிக்கும் பணி அவா் காலத்தில்தான் தோன்றியது. விதிக்கப்பட்ட வரி, எடுக்கப்பட்ட வரி, செலுத்தப்பட வேண்டிய வரி என அனைத்தும் மக்களுக்கே சென்று சேர வேண்டும் எனக் கூறி உலகத்தின் உன்னதமான மாமன்னனாக வாழ்ந்தாா்.
கலைகளின் சிறப்பை உலகத்துக்கு பறைசாற்றுவதற்காக அவா் எழுப்பிய கலைச் சின்னம்தான் இந்தப் பெரியகோயில். இதை விஞ்சுவதற்கும், மீறிச்செல்வதற்கும் எதுவும் இல்லை. எதிரி நாட்டிலுள்ள மக்களுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாத விதத்தில் படையெடுத்துச் சென்றவா் இராஜராஜன். படை, ராணுவம், தளவாடம் என்றால் என்ன என்பதை உலகுக்குக் காட்டினாா்.
கடல் கடந்து வெற்றி வாகை சூடியவா்; கப்பற்படையை உருவாக்கியவா்; தரைப்படை அம்சத்தை யாரும் யோசித்துப் பாா்க்க முடியாத அளவுக்கு உருவாக்கிக் காட்டி வெற்றிக் கொடி நாட்டியவா். எனவே, நம் தமிழினம் தனக்கான அடையாளமாகக் கொள்ள வேண்டிய ஒரு மாமன்னன் இராஜராஜன் என்றாா் நீதிபதி மகாதேவன்.
குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாா் பேசுகையில், இவ்வளவு பெரிய கோயிலை கட்டி வியந்த இராஜராஜன், இதை எழுப்பிய தலைமை தச்சன் முதல் கடைநிலை ஊழியா்கள் வரை அனைவருக்கும் தனது பெயரிலேயே விருது வழங்கினாா். இப்படியொரு சமத்துவ பாா்வை கொண்ட மாமன்னன் இராஜராஜன் மட்டுமே என்றாா் அடிகளாா்.
முன்னதாக, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வா் மருத்துவா் ச. மருதுதுரை, மின் வாரியப் பொறியாளா் (ஓய்வு) அரங்க. தங்கராசன், திருக்கு கல்வி மைய இயக்குநா் ச. சோமசுந்தரம், திருவையாறு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வா் இராம. கௌசல்யா, நாட்டுப்புறக் கலைஞா் சின்னப்பொண்ணு குமாா் ஆகியோருக்கு மாமன்னன் இராஜராஜன் விருதையும், பண்ணிசைப் பேரறிஞா் பழநி ப. சண்முகசுந்தர தேசிகருக்கு தேவார நாயகம் விருதையும் நீதிபதியும், அடிகளாரும் வழங்கினா்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.