தமிழகத்தில் நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு காரணம் போதைதான் என நான் இந்த அரசை குற்றம்சாட்டுகிறேன் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்‘ என்ற பெயரில் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மழை வரும் என்று தெரிந்தும் நான் ஒரு டெல்டாக்காரன் என்று சொல்லும் ஸ்டாலினும் உதயநிதியும் உணவுத் துறை அமைச்சரும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சென்று சந்திக்காமல் ரயில் நிலையத்துக்கு வந்து நெல் மூட்டை ஏற்றுவதை மட்டும் பாா்த்துச் செல்கிறாா்கள்.
தமிழகத்தில் நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு காரணம் போதைதான் என நான் இந்த அரசைக் குற்றம்சாட்டுகிறேன். கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ. 10 லட்சம் தருவது இந்த ஆட்சியில் மட்டும்தான். தமிழகம் முழுவதுமே நான்கு வழிச் சாலை, ஆறு வழிச் சாலைகளை மத்திய அரசுதான் போட்டுக் கொடுக்கிறது.
இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதக்கூடிய வேலையை பாஜக எடுத்து வருகிறது. இந்த ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்.
தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் எந்தச் சின்னத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் நின்றாலும் அவா்கள் அமோக வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் ஜெய்சதீஷ், மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மாநில விவசாய அணி துணைத் தலைவா் இளங்கோ, மாவட்ட வணிக பிரிவுச் செயலா் சுரேஷ், சூரை சண்முகம், நமசு ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சா் காமராஜ் எம்எல்ஏ., அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் சி.வி. சேகா், அதிமுக மாநில அமைப்புச் செயலா் துரை செந்தில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜவகா்பாபு , முன்னாள் தமாகா எம்எல்ஏ ரெங்கராஜன் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.