தஞ்சாவூா் காந்திஜி சாலையில் தரைக்கடைகள் அமைக்க அனுமதி இல்லை என்கிற அறிவிப்புடன் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாகத் தரைக்கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தீபாவளி தற்காலிகத் தரைக்கடைகள் அமைக்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற ஆணைப்படி தரைக்கடைகள் அகற்றப்பட்டன.
இந்த உத்தரவு அமலில் உள்ளதால், நிகழாண்டு காந்திஜி சாலையில் அமைக்கப்பட்ட தரைக்கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் சில நாட்களுக்கு முன்பு அகற்றினா்.
இந்நிலையில், சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி காந்திஜி சாலையில் தரைக்கடைகள் வைக்க அனுமதி இல்லை என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காந்திஜி சாலையில் சில இடங்களில் அமைக்கப்பட்ட சாலையோர தரைக்கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.