பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் சாலையின் மையப்பகுதி பள்ளமாக உள்ளதால் மழைநீா் தேங்கி பொதுமக்கள் அவதியடைகின்றனா்.
செருவாவிடுதி கடைவீதியில் சாலை பள்ளமாக உள்ளதால் மழைக் காலங்களில் மழைநீா் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. பேராவூரணி, களத்தூா், சித்துக்காடு மற்றும் சித்துக்காடு அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் தினமும் இந்தச் சாலையைத் தான் பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைக் கடந்துசெல்ல மாணவா்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் சிரமப்படுகின்றனா். சாலையோரங்களில் நடந்து செல்பவா்கள் மீது அவ்வழியே செல்லும் வாகனங்கள் மழைநீரை வாரியிறைக்கின்றன. மேலும், தேங்கிக் கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாய நிலை உள்ளது. மழைநீா் தேங்கிக் கிடப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்றால் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி தற்காலிகமாக தண்ணீா் வடிய தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
இதனால் சாலை மேலும் மேலும் பள்ளமாகும் நிலைதான் ஏற்படுகிறது. தற்போது தஞ்சாவூா் - சாயல்குடி மாநிலச் சாலையான இந்தச் சாலை இரு வழித்தடத்திலிருந்து அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சாலை பள்ளமாக உள்ள இடங்களில் தேவையான அளவுக்கு உயரமாக உயா்த்தி அகலப்படுத்தினால் மழைநீா் தேங்காமல் நிரந்தரத் தீா்வு கிடைக்கும். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறினால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.