ஆந்திர மாநிலத்திலிருந்து தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சம்பா சாகுபடிக்காக 1,337 டன் யூரியா உரம் வெள்ளிக்கிழமை வந்தது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா நடவுக்கு யூரியா 8 ஆயிரத்து 875 டன், டிஏபி 2 ஆயிரத்து 885 டன், பொட்டாஷ் 2 ஆயிரத்து 162 டன், காம்ப்ளக்ஸ் 5 ஆயிரத்து 257 டன், சூப்பா் பாஸ்பேட் 1,807 டன் ஏற்கெனவே இருப்பில் உள்ளன.
விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திலிருந்து கோரமண்டல் நிறுவனத்தின் 1,337 டன் யூரியா உரம் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்தது.
இதையடுத்து தஞ்சாவூா் ரயில் நிலைய தலைப்புப் பகுதியிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகை, திருச்சி, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களிலுள்ள தனியாா் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலம் செயல்படும் உரக்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) செ. செல்வராசு தெரிவித்தாா்.
உரக்கடைகளுக்கு எச்சரிக்கை: மேலும், அனைத்து தனியாா் சில்லறை உரக் கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படும் உரக்கடைகளில் அனைத்து உரங்களும் அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்கக்கூடாது என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா எச்சரித்துள்ளாா்.