தஞ்சாவூரில் மாநில அளவில் பாா்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான முதல்வா் கோப்பையை வென்று தஞ்சாவூருக்கு திரும்பிய மாணவிகளுக்கு சனிக்கிழமை மேள, தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில், மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் தஞ்சாவூா் பாா்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
இதைத்தொடா்ந்து, சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் 7 போ் முதல் பரிசு பெற்று, தங்கப்பதக்கத்துடன் பள்ளிக்கு சனிக்கிழமை திரும்பினா். இவா்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பட்டாசு வெடித்து, பூங்கொத்து, இனிப்பு வழங்கி, மேள, தாளத்துடன் வரவேற்பு அளித்தனா்.