தஞ்சாவூா் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 199 விவசாயிகளிடமிருந்து 1.34 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட புதுக்கோட்டை சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் மற்றும் அரிசி சேமிப்பு கிடங்கு, சந்தானம் நெல் சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக சேமிக்கும் பணி, ரயில் தலைப்புப் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெறுவதை புதன்கிழமை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மேலும், தற்போது பெய்து வரும் மழையிலிருந்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்கும் வகையில் நெல் சேமிப்பு நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த அவா், தேவையான இடங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். இதையடுத்து, ஆட்சியா் தெரிவித்தது:
மாவட்டத்தில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அக்டோபா் 14-ஆம் தேதி 292 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலமாக 25 ஆயிரத்து 199 விவசாயிகளிடமிருந்து 1.34 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொடா்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏறத்தாழ ரூ. 325 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை போா்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பான முறையில் இயக்கம் செய்து சேமித்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.
அப்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் (தரக்கட்டுப்பாடு) வி. காா்த்திகைசாமி, உதவி மேலாளா் ல. ரமேஷ்குமாா், தர ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.