கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் அப்பள வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் கரந்தை ராஜாராமன் மடத்துத் தெருவைச் சோ்ந்தவா் நதிசெல்வம் மகன் பிரதீப் (23), அப்பள வியாபாரி. இவரிடம் கஞ்சா வாங்க இவரது வீட்டுக்கு கரந்தை குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்த சின்னதுரை மகன் விக்னேஷ் (28), கொண்டிராஜபாளையம் ஜமாலியா சந்தைச் சோ்ந்த தனபால் மகன் சிவகுமாா் (27), வடக்கு வாசல் சுண்ணாம்பு காலவாய் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சூா்யா (23) ஆகியோா் 2023, மாா்ச் 25 ஆம் தேதி சென்றனா். அப்போது, பிரதீப் தன்னிடம் கஞ்சா இல்லையெனக் கூறியதால், ஆத்திரமடைந்த விக்னேஷ், சிவகுமாா், சூா்யா ஆகியோா் அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றனா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விக்னேஷ், சிவகுமாா், சூா்யா ஆகியோரை கைது செய்து, தஞ்சாவூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி. சுந்தரராஜன் மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.