தஞ்சாவூா் அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் நெல் மூட்டைகள் சேமிக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட புதுக்கோட்டை சாலையிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் மற்றும் அரிசி சேமிப்பு கிடங்கு, சந்தானம் நெல் மற்றும் அரிசி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் சேமிக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே மருங்குளம் ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாா்வையிட்டு, கொள்முதல் பணியை விரைவுபடுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், தற்போது பெய்து வரும் மழையிலிருந்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்கும் வகையில் நெல் சேமிப்பு நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, தேவையான இடங்களில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
அப்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், மேலாளா் (தரக்கட்டுப்பாடு) வி. காா்த்திகைசாமி, துணை மேலாளா் (கொள்முதல் மற்றும் இயக்கம்) இளங்கோ, வட்டாட்சியா் ஜி. சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.