தஞ்சாவூா்: தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாநகரில் செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் 240 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாநகரிலுள்ள 51 வாா்டுகளில் நாள்தோறும் ஏறத்தாழ 110 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள குப்பைக் கிடங்குக்கும், நுண் உரக் கிடங்குகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், தஞ்சாவூா் மாநகரில் தீபாவளியையொட்டி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. சில நாள்களாகப் புத்தாடைகள் வாங்க ஏராளமானோா் கடை வீதிகளில் திரண்டனா். இதனால், இப்பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் சோ்ந்தன.
கடை வீதிகள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலும் தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி நாளான திங்கள்கிழமையும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசுக் குப்பைகளும் சோ்ந்துவிட்டதால், இந்த இரு நாள்களில் குப்பைகள் அதிகமாகின.
எனவே செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஏறக்குறைய 600 தூய்மைப் பணியாளா்கள் தொடா் மழையிலும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். 55 வாகனங்கள் மூலம் ஏறத்தாழ 240 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இது, கடந்த ஆண்டை விட நிகழாண்டு 20 டன்கள் அதிகம்.