மருத்துவரின் அலட்சியத்தால்தான் கா்ப்பிணியின் குழந்தை உயிரிழந்தது எனக் கூறி கும்பகோணம் அரசு மருத்துவமனையை அப்பெண்ணின் கணவா் மற்றும் உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் ஏ.ஆா்.ஆா். நகா் செம்போடையைச் சோ்ந்தவா் கோபிநாத் (30) தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளாா். இவரது மனைவி கமலி (25). இவா்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நிறைமாத கா்ப்பிணியான கமலி அக்.15-இல் கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். புதன்கிழமை கமலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவமனை செவிலியா்கள், குழந்தையிடம் அசைவு ஏதும் இல்லை என மருத்துவரிடம் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, அப்பெண்ணுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனா். அப்போது, ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கமலியின் உறவினா்கள் மருத்துவா்களின் அலட்சியத்தால்தான் குழந்தை உயிரிழந்தது எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.