திருச்சியில் உள்ள மகளிர் சிறையில் மாணவி உள்ளிட்ட 3 பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில், கோவையைச் சேர்ந்த மாணவர் அமைப்பான சமூக விழிப்புணர்வு மாணவர் எழுச்சி இயக்கம் ( எஸ்.யூ.எம்.எஸ் ) மாணவியர் வளர்மதி, ஸ்வாதி இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஏப் 15-ஆம் தேதி நெடுவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பங்கேற்க சென்றபோது கைது செய்யப்பட்டவர்கள்.
இதில் வளர்மதியை செவ்வாய்க்கிழமை முதல் தனிச்சிறையில் அடைத்தாக கூறப்படுகின்றது. இது குறித்து அவர் சிறை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால் தனிச்சிறையில் வேறு இடத்துக்கு மாற்ற முடியாது என்று கூறிவிட்டனராம். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னை சிறை நிர்வாகம் துன்புறுத்துவதாகக் கூறி வளர்மதி, செவ்வாய்கிழமை உண்ணாவிரதம் இருந்துள்ளார். புதன்கிழமையும் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார். இந்த தகவல் புதன்கிழமை சக சிறைவாசிகளுக்கு தெரியவந்ததையடுத்து வளர்மதிக்கு ஆதரவாக, கடந்தாண்டு கரூரில் கியூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சேலம் மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கலா (45), சந்திரா (52) ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிடக் கோரி சிறைத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.