திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில், அரிய உயிரினமான நீர்நாய் நடமாட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியான குழுமாயி அம்மன் கோயில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் சில அரிய உயிரினங்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருச்சியைச் சேர்ந்த தனியார் பள்ளித் தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆராய்ச்சியாளருமான பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட இடத்துக்கு அண்மையில் சென்று பார்த்தனர்.
அப்போது, அதிகாலை 5 மணியளவில் உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் நீர்நாய் நடமாட்டத்தை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மேற்குறிப்பிட்ட இடத்தில் குட்டையான நான்கு கால்கள், நீண்ட வால், மீசையுடன் நாய்போன்று விலங்கு இருந்ததை காணமுடிந்தது. அதனை நாங்கள் படம் எடுத்தவுடன் மீண்டும் தண்ணீரில் குதித்து மூழ்கிவிட்டது. பின்னர்தான் அது நீர்நாய் எனத் தெரிந்தது. மீண்டும் அடுத்தநாளும் அதே இடத்துக்கு சென்றபோது நீர்நாய் அதே இடத்தில் இருந்தது. அது தண்ணீரில் மூழ்கி மீன்களை உண்பதும், சிறிதுநேரம் கரைக்கு வந்து ஓய்வெடுப்பதுமாக இருந்தது.
இந்தியாவில் மூன்று வகை நீர்நாய்கள் (The common Otter, The smooth Indian Otter, The clawless Otter) உள்ளன. இவை அனைத்தும் தென்னிந்திய பகுதிகளில் காணப்படுகின்றன. இதில், குளிர்ச்சியான மலைகளின் குன்றுகளில் உள்ள அருவிகளிலும் குளங்களிலும் வாழும் நீர்நாய் (The Common Otter) வாழ்கின்றன. நகமற்ற நீர்நாய் (Clawless Otter) நீலகிரி, குடகு, பழனி மலைகளில் உயர்ந்த சரிவுகளில் காணப்படுகின்றன. இவை தவிர சமவெளி நீர்நாய்கள் ஆறுகளின் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த வகை (The Smooth Indian Otter) நீர்நாய் தான் திருச்சியில் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.