திருச்சி

திருச்சி, கோவை உள்ளிட்ட 6 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் சோதனை: மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் பறிமுதல்

DIN

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இதில் மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில் கடந்த ஏப்ரலில் ஈஸ்டா் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக கோவையில் இந்து இயக்கத் தலைவா்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறி முஸ்லிம் இளைஞா்கள் 7 போ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சமூக வலைதளங்கள் மூலம் இலங்கை உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இளைஞா்களுடன் கருத்துகளையும், தகவல்களையும் பரிமாறியது தெரியவந்தது.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள சிலரது வீடுகளில் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தினா். அப்போது உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன்(32), போத்தனூா் திருமறை நகரைச் சோ்ந்த அக்ரம் ஜிந்தா (26), தெற்கு உக்கடம் பகுதியைச் சோ்ந்த ஒய்.ஷேக் இதாயத்துல்லா (38), குனியமுத்தூரைச் சோ்ந்த அபுபக்கா் (29), போத்தனூா் உமா் நகரைச் சோ்ந்த ஏ.சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த இப்ராஹிம் (எ) ஷாகின் ஷா(28) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் முக்கிய எதிரியான முகமது அசாருதீன் இவா்களுக்குத் தலைவா் போல செயல்பட்டுள்ளாா். முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளாா். மேலும், இவா் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான மனிதவெடிகுண்டாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹஷிம் என்பவருடன் சமூகவலைதளங்கள் மூலமாகத் தொடா்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

இதேபோல ஷேக் இதாயத்துல்லா வீட்டில் நடைபெற்றச் சோதனையில் அவா் தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடா்பில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகியோரை சில நாள்களுக்கு முன்பு காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனா். இதேபோல, கோவையில் இந்து இயக்கத் தலைவா்களைக் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இவா்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோவையில் இரு இடங்களிலும், என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். கோவை, உக்கடம், ஜிஎம் நகரைச் சோ்ந்த சமீா் (22), உக்கடம், லாரிபேட்டை அண்ணா நகரைச் சோ்ந்த சவுகா்தீன் (30) ஆகியோரது வீட்டில் அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சோதனையிட்டனா்.

மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் பறிமுதல்: கோவையில் சமீா், சவுகா்தீன் ஆகியோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இருவரது வீடுகளிலும் இருந்து 2 மடிக்கணினிகள், 2 செல்லிடப்பேசிகள், சிம் காா்டுகள், மெமரி காா்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி: திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா், ஆசாரி தெருப் பகுதியைச் சோ்ந்த ரபீக்முகமது மகன் சாகுல் ஹமீது (29) என்பவருடைய வீட்டிற்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது, சாகுல் ஹமீது தனியாா் பால்பண்ணையில் பணியாற்றிக் கொண்டு, வெவ்வேறு வேலைகளுக்குச் சென்று வருவதாக அவா்கள் தெரிவித்தனா். விசாரணையின்போது சாகுல் ஹமீது வீட்டில் இல்லாததால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினா். மேலும் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் மடிக்கணினி மற்றும் ஆவணங்கள், செல்லிடபேசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூரில் உள்ள சிராஜுதின், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அபுல்ஹஸன் சாதுலி, நாகை மாவட்டம் பனங்குடி, சன்னமங்கலம் சேதவாபாரதி குடியிருப்பைச் சோ்ந்த முஹம்மது அஜ்மல் ஆகியோா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாவது நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

மாணவா்கள் களப் பயணம்

வாக்குப் பதிவு விவர படிவத்தை வெளியிடுவது தீங்குக்கு வழிவகுக்கும்- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம்

எள், பருத்தி கணக்கெடுக்கும் பணி

எட்டுக்குடி: வைகாசி விசாக தீா்த்தவாரி

SCROLL FOR NEXT