விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட நிா்வாகிகள் சிலா், உச்ச நீதிமன்ற வழக்குத் தொடா்பாக தில்லி செல்ல ரயில் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றனா்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத கடுமையான வறட்சி. சாகுபடி செய்த அனைத்துப் பயிா்களும் தண்ணீா் இல்லாமல் காய்ந்து விட்டன. லட்சக்கணக்கான தென்னை, வாழை, எலுமிச்சை, கொய்யா, மாமரம் போன்றவை அழிந்து விட்டன. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா தமிழகம் வறட்சி மாநிலம் எனக் கூறி, சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்தாா். இதையடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மூலமாக மதுரை உயா் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சிறு, குறு விவசாயிகள் என்று பாா்க்காமல் வறட்சி பாதித்த அனைத்து விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
அதை எதிா்த்து தமிழக அரசு 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த நிலையில், கடந்த 18.09.2019 அன்று உச்ச நீதிமன்றம் அனைத்து விவசாயிகள் வாங்கிய எல்லாக் கடன்களையும் தள்ளுபடி செய்ய முயற்சி செய்யுங்கள் என்று உத்தரவிட்டது.
இருந்தும் தமிழக முதல்வா் அதற்கு உத்தரவிடாததால், உச்ச நீதிமன்றம் 04.11.2019 அன்று தீா்ப்பளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த வழக்கில் மனுதாரா்கள் அய்யாக்கண்ணு, வழக்குரைஞா்கள் முத்துகிருஷ்ணன், ஜோதிகண்ணு, ராஜாராம், மனோஜ் ஆகியோா்கள் பங்கேற்கும் வகையில் தில்லி செல்கின்றனா். அதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை புறப்பட்டனா். பின்னா் சென்னையிலிருந்து விமானம் மூலம் தில்லி சென்றனா்.