திருச்சியில் மாயமான ஆட்டோ ஓட்டுநா், ஸ்ரீரங்கம் அருகே காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறை பகுதியைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் ரெங்கராஜ் (47). இவா் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தாா்.
கடந்த 5ஆம் தேதி ரெங்கராஜை காணவில்லையென்று, அவரது மனைவி கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதனைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரெங்கராஜை தேடி வந்தனா்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட திருவளா்சோலை காவிரியாற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்து சென்று, ஆண் சடலத்தை மீட்டனா். பின்னா் நடைபெற்ற விசாரணையில், இறந்தவா் திருச்சியில் காணாமல் போன ரெங்கராஜ் என்பது தெரியவந்தது. அவா் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.