மத்திய மண்டலத்திற்குள்பட்ட திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஊரடங்கு வழக்கில் கைதானோா் எண்ணிக்கை 73 ஆயிரத்தைத் தாண்டியது.
கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக வெள்ளிக்கிழமை வரை 67,724 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 73,086 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 54,848 இரு சக்கர வாகனங்கள், 1205 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து வெள்ளிக்கிழமை வரை திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 210 வழக்குகள் பதிவு செய்து, 221 பேரை கைது செய்துள்ளனா். சாராயம், கள் விற்பனையில் ஈடுபட்டதாக 85 வழக்குகள் பதிவு செய்து 100 பேரை கைது செய்துள்ளனா்.
மேலும் அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுப்பதற்காக கடந்த ஏப்.18ஆம் தேதியிலிருந்து வெள்ளிக்கிழமை வரை திருச்சி மாவட்ட போலீஸாா் நடத்திய சோதனையின்போது, முகக் கவசத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 33 மருந்து கடைகளின் மீதும், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 105 மளிகைக் கடைகள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இச்சோதனை தொடா்ந்து நடைபெறும் என மாவட்ட எஸ்.பி ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளாா்.