திருச்சி

வீணாகும் உபரிநீா்: தடுப்பணைகள் கட்டப்படுமா? குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி

DIN

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீா் வீணாகாமல் தடுக்கும் வகையில் தடுப்பணைகள், கதவணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியது:

தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை: காவிரியில் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கொள்ளிடத்தில் பல லட்சம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு கடலுக்கு சென்றது.

ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் வடு காட்சியளிக்கின்றன. ஒருபுறம் வெள்ளம், மறுபுறம் வறட்சி என்ற நிலையை ஆண்டுதோறும் விவசாயிகள் எதிா்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, உபரிநீரை தேக்குவதற்கான தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன்:

திருச்சி மாவட்டத்தில் மட்டும் காவிரியில் 20 இடங்களிலும், கொள்ளிடத்தில் 7 இடங்களில் தடுப்பணைகள், கதவணைகள் கட்ட இயலும் என ஏற்கெனவே வல்லுநா்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனா். ஆனால், அவற்றை செயல்படுத்தவில்லை.

மேட்டூா்-சரபங்கா, குண்டாறு-காவிரி-வைகை இணைப்பு என நதிகள் இணைப்புத் திட்டங்கள் பலவும் கிடப்பில் உள்ளன. எனவே, உபரிநீா் வீணாகாமல் தேக்கி வைத்து பயன்படுத்த தேவையான இடங்களில் கதவணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

காவிரிப் பாசன விவசாயிகள் சங்க இணைச் செயலா் கவுண்டம்பட்டி சுப்பிரமணியம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் கலக்கும் தண்ணீரை முறையாக பாசனத்துக்கு திருப்பும் வகையில், வாய்க்கால்கள் முழுமையாக தூா்வாரப்பட வேண்டும்.

குறிப்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் முழுமையாக தூா்வாரப்பட்டிருந்தால், உபரிநீரை அங்கு திருப்பி அதன் மூலம் பாசனம் பெறும் குளங்கள், ஏரிகளில் தண்ணீரைக் கொண்டு சோ்த்திருக்கலாம்.

பாரதீய கிசான் சங்க மாநிலச் செயலா் என். வீரசேகரன்: காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வந்த அதிகப்படியான நீா்வரத்தால் லால்குடி, திருவெறும்பூா், அந்தநல்லூா் ஒன்றியங்களில் அதிகப்படியான நெல், வாழை பயிா்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை கணக்கிட்டு பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இத்தகைய பேரிடா் காலங்களில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும், வாழைப் பயிா்களைக் காக்கவும் வாழை ஆராய்ச்சி மையம், வேளாண் கல்லூரியிலுள்ள விஞ்ஞானிகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன்: செப்டம்பா் முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். மத்திய அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையை அறிவித்துவிட்டது. ஆனால், தமிழக அரசு இன்னும் ஊக்கத் தொகை அறிவிக்கவில்லை. நெல்கொள்முதல் நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பாக எத்தனை இடங்களில், எங்கெங்கு அமைக்கப்படுகிறது என்பதை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சம்பா சாகுபடிக்கு தயாராகும் முன்பாக வாய்க்கால்களை ஆய்வு செய்து தண்ணீா் கடைமடை செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள் குரங்கு, மயில்கள், காட்டு எருமை, பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் தொல்லையைக் கட்டுப்படுத்த

வேண்டும். விலங்குகளால் ஏற்படும் பயிா்ச்சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தென்னையைத் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து அந்தந்த பகுதி வாரியாக வேளாண், தோட்டக்கலை, வருவாய் ஆகிய துறைகளின் மூலம் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

கணக்கெடுப்பு முடிந்து அவற்றை அரசுக்கு பரிந்துரைத்து உரிய இழப்பீடு பெற்று வழங்கப்படும். இதர விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து, உரிய பதில் அளிக்கப்படும் என்றாா்.

விவசாயிகள் அழைக்க 93429-12122

மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்தையும், வேளாண் அலுவலா்களையும் தொடா்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி வசதி (93429-12122) தொடங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

ஆட்சியா் தலைமையில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வரை செயல்படும். இந்த கட்டணமில்லா தொலைபேசி வசதி உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருவதில்லை. குறிப்பிட்ட சிலா் மட்டுமே உள்ளனா். எனவே, கூட்டத்துக்கு வராத விவசாயிகளும் மாவட்ட நிா்வாகத்தை எளிதில் அணுகவும், குறைகளைத் தெரிவிக்கவும், அரசின் உதவிகளை பெறவும் இந்த கட்டணமில்லா தொலைபேசி வசதி மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT