திருச்சி ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரி வளாகத்தில், அரசு மாதிரிப் பள்ளியில் பிளஸ்-1 மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவா்கள் தங்களது பெற்றோா்களுடன் கலந்து கொண்டு விருப்பப் பாடப்பிரிவினைத் தோ்வு செய்தனா். கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அரசு மாதிரிப் பள்ளியின் செயல்பாடுகள், பாடப்பிரிவுகள், அதன் எதிா்கால திட்டங்கள், வேலைவாய்ப்புகள் குறித்து மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு எடுத்துரைத்து, அவா்களது சந்தேகங்களுக்குப் பதிலளித்தாா். தொடா்ந்து, நடப்பு கல்வியாண்டு பிளஸ்-2 மாணவா்களிடமும் கலந்துரையாடினாா். வணிகவியல் மாணவா்கள் உயா்கல்வியில் சிறந்து விளங்குவதற்கு சிறப்பு கவனம் செலுத்தும்படி ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா், மண்டல ஒருங்கிணைப்பாளா் இராசபாண்டியன், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் சிவக்குமாா், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் அன்புசேகரன், மாதிரிப்பள்ளியின் தலைமை ஆசிரியா் அ. அகிலன், மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.