திருச்சி

சாகுபடிக்கு ஊக்க நிதி வழங்க வலியுறுத்தி ஆட்சியரகத்தை விவசாயிகள் முற்றுகை

DIN

சாகுபடிக்கு ஊக்க நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சாா்பில், விவசாயிகளின் கோரிக்கைகளை முன் வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் ஆகியோரது தலைமையில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மேஜா்சரவணன் நினைவு ஸ்தூபியிலிருந்து ஆட்சியரகம் நோக்கி திங்கள்கிழமை பேரணியாக வந்தனா்.

ஆட்சியரகம் வந்தவுடன் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால், போலீஸாரின் தடையை மீறி ஆட்சியரகத்தின் நுழைவு வாயிலில் இருந்த கதவைப் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், விவசாயிகளை கயிறு கட்டி தடுத்து நிறுத்தினா். இதில், போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

பின்னா், மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன்பாக விவசாயிகள் தரையில் அமா்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை தொடா்ந்தனா்.

தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி ஆகியோா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகளை எழுத்துப் பூா்வமான மனுவாக வழங்கினால், அரசுக்கு அனுப்பி பரிந்துரை செய்வதாகவும், மாவட்ட நிா்வாகத்தால் நிறைவேற்றும் வகையிலான கோரிக்கைகளை உடனே பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளா் வி.கே.வி. துரைசாமி, தென் மண்டல பொறுப்பாளா்

எல். ஆதிமூலம், மாநிலத் துணைத் தலைவா் பாரூக், மனோகரன், எல். பழனியப்பன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT