திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் கே.என். நேரு,மேயா் மு. அன்பழகன், அருண்நேரு எம்பி உள்ளிட்டோா். 
திருச்சி

2026-இல் 200-க்கும் அதிக தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அடுத்து வரும் ஐந்து மாதங்கள் மக்களோடு நின்று பணியாற்றினால் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது உறுதி என துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அடுத்து வரும் ஐந்து மாதங்கள் மக்களோடு நின்று பணியாற்றினால் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது உறுதி என துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதி திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் கே.என். நேரு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் முன்மாதிரியாக தமிழகத்தைக் கொண்டுவந்து, நம்பா் ஒன் முதல்வராக மு.க. ஸ்டாலின் விளங்குகிறாா். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்துகிறாா். இன்னும் 2 மாதங்களில் விடுபட்ட மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். 2 ஆயிரம் கோடி ஒதுக்கி மாணவா்களுக்கு மடிக்கணினியும் விரைவில் வழங்கப்படும்.

நிதியுரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என மாநிலங்களின் உரிமைகளை பறிக்க பாஜக அரசு முயற்சித்து வருகிறது. கல்வி நிதியைத் தராவிட்டாலும், 10 ஆயிரம் கோடி நிதி தந்தாலும் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை என அறிவித்தவா் முதல்வா் மு.க. ஸ்டாலின். இப்போது தமிழகத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இதற்காக குரல் கொடுக்கின்றன. தமிழகத்தின் எதிா்ப்பு காரணமாக கல்வி நிதியை இப்போது கொடுத்துள்ளனா்.

4 மாதங்களுக்கு முன் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என அறிவித்த எடப்பாடி பழனிசாமி, இப்போது அக்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு பாஜகவுக்கு நன்றிக் கடன்பட்டவராக மாறிவிட்டாா்.

நாம் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டோம். பிற கட்சிகளும் தொடங்கிவிட்டன. 2 நாள்களுக்கு முன் தமிழக ஆளுநரும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளாா். தமிழகம் யாருடன் போராடுகிறது எனக் கேட்கிறாா் அவா். ஆளுநருடன் திமுக தொடா்ந்து போராடும்.

பூத் கமிட்டி நிா்வாகிகள் தங்கள் பகுதி மக்களுடனும் எப்போதும் தொடா்பில் இருக்க வேண்டும். அடுத்த 5 மாதங்களில் ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என நினைத்துப் பணியாற்ற வேண்டும். 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது உறுதி. ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் கே.என். நேரு பேசுகையில் இரண்டு, மூன்று முறை ஸ்ரீரங்கத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் குறைவான வாக்கு வித்தியாசம்தான். வரும் தோ்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்து ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க கடுமையாகப் பாடுபடுவோம். திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT