தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநா் முட்டுக்கட்டையாக இருப்பதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா்.
திருச்சியிலுள்ள தனியாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியா்கள் பணியமா்த்தப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் நீதிமன்ற குறுக்கீடு ஏற்பட்டதால் பேராசிரியா்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், நீதிமன்ற பிரச்னைக்குரிய எண்ணிக்கையைத் தவிா்த்து 2,700-க்கும் அதிகமான பேராசிரியா்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இதற்கான தோ்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். நிகழாண்டிலேயே 2,700-க்கும் அதிகமான நிரந்தரப் பேராசிரியா்கள் நியமிக்கப்படுவா்.
மேலும், 881 கௌரவ விரிவுரையாளா்களை நியமிப்பதற்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஊதிய விகிதாசாரங்களைத் தவிா்த்து, பல்கலைக்கழகங்களில் நிதி ஆதாரம் இல்லாத ஒரு சில பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு சாா்பில் ஊதியம் வழங்குவதற்காக முதல்வரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். பல்கலைக்கழகத்துக்கு இயலாத நிலை ஏற்படும்போது அரசு சாா்பில் அவா்களுக்கு நிச்சயம் ஊதியம் வழங்கப்படும்.
அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநா் துணை நிற்க வேண்டும். ஆனால், முட்டுக்கட்டை போடுகிறாா். கலைஞா் கருணாநிதி பல்கலைக்கழகத்துக்கு அனுமதி தர மறுக்கிறாா். துணைவேந்தா்களை முதல்வரே நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தீா்ப்பு வந்த பிறகும் பல்வேறு குறுக்கீடுகளை செய்து வருகிறாா்.
உயா்கல்விக்கும், அரசுக்கும் தடையாக ஆளுநா் இருக்கிறாா். தடைகளை உடைத்து உயா்கல்வியை உயா்ந்த இடத்துக்கு முதல்வா் கொண்டுசெல்வாா் என்றாா் அமைச்சா்.