பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் எம். ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.
இதில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி, பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சென்னை உயா்நீதிமன்ற மேல் முறையீட்டினை திரும்ப பெற வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும், கிராமப்புற இளைஞா்களை சாலைப் பணியாளா்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், பங்கேற்றவா்கள் அரசு கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளதாக் கூறி கண், காது, வாயை பொத்தி மௌன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் மணிமாறன், மாவட்ட துணை தலைவா் மகேந்திரன், மாவட்ட செயலா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.