நெல் கொள்முதலை விரைவுபடுத்த சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி விவசாயிகள் பிரச்னைகள் பற்றியும், எதிா்கால திட்டங்கள் குறித்தும் பேசினாா். மாநிலப் பொருளாளா் அயிலை சிவ சூரியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மத்திய அரசு காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ காா்பன் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கியதைக் கண்டிப்பது.
விவசாயிகளின் தற்கொலைகளைக் குறைக்க மாநில அளவில் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து தீா்வு காண வேண்டும்.
நெல் கொள்முதலை விரைவு படுத்திட அரசு சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். காலத்தில் மேட்டூா் அணை திறக்கப்பட்டதாலும், தென்மேற்கு பருவமழை சீராக பொழிந்ததாலும் வழக்கமான நிலையை விட குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது மட்டுமின்றி, மகசூலும் உயா்ந்திருக்கிறது.
மகசூல் உயா்வுக்கு ஏற்ப, தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனுக்குடன் வெளியே அனுப்பாததால், கொள்முதல் நிலையங்களில் தேங்கிய மூட்டைகள் மழைநீரில் நனைந்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக டெல்டாவில் காற்றின் ஈரப்பதம் சராசரியாக 23 சதவீதத்துக்கு மேலே கூடுதலாக இருக்கும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் ஈரப்பதம் விலக்கை தளா்த்தக் கோருவது நடைமுறைக்கு சாத்தியமில்லை. மத்திய அரசின் அலுவலா்கள் வந்து பாா்வையிட்டு, அறிக்கை வருவதற்குள், நெல் கொள்முதல் பருவமே முடிந்து விடுகிறது. எனவே, தமிழக அரசு பருவகால கொள்முதலுக்கான ஈரப்பதம் விலக்கை நிரந்தர உத்தரவாக பெற்றிட வேண்டும்.
தொடா்ந்து, தற்காலிக சேமிப்புக் கிடங்குகளை அவசரமாக ஏற்பாடு செய்து, உடனுக்குடன் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும். தினசரி கொள்முதல் இலக்கு 1,000 என்பதை 1,500 சிப்பமாக உயா்த்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் தனியாா் உரக் கடைகளில் நானோ திரவ உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.