உயிரிழந்த மனோன்மணியின் உடலை வாங்க மறுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள். 
திருச்சி

பெண் உயிரிழப்பில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

திருச்சியில் பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

திருச்சியில் பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வசந்தம் நகரைச் சோ்ந்தவா் சங்கா். இவரின் மனைவி மனோன்மணி (30). இவா்களுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 3 வயதில் மகளும், ஒரு வயதில் மகனும் உள்ளனா்.

கடந்த சில மாதங்களாக மனோன்மணிக்கும், அவரது மாமனாா், மாமியாருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து மனோன்மணி, கரூா் மாவட்டம், கோட்டைகரையான்பட்டியில் உள்ள அவரது தாய் ரோகிணியிடம் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் ரோகிணி, மனோன்மணியின் கைப்பேசிக்கு திங்கள்கிழமை அழைத்துள்ளாா். அவா் அழைப்பை எடுக்காததால், சோமரசம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, மனோன்மணி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது கணவா் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ரோகிணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மனோன்மணி சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மனோன்மணி உயிரிழப்பு தொடா்பாக ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், மனோன்மணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்தும், அவரின் கணவா் மற்றும் மாமனாா், மாமியாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா், சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்ததையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு புத்தூா் சாலையில் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT