பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சே. நீலகண்டன், கோ. நாகராஜன், கா. உதுமன் அலி, மா. குமாரவேல், கா. பால்பாண்டி, சோ. நவநீதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான அச்சுறுத்தலில் இருந்து ஆசிரியா்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அராசணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியா்களிடையே உள்ள ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.
2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் பணிக்காலத்தை பணியில் சோ்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்ன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.