துறையூா் அருகே பச்சமலையில் குறிச்சி, வாலையூா், தேன்பாடி கிராமங்களுக்குள் பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னா்.
பச்சமலையில் வண்ணாடு ஊராட்சியில் குறிச்சி, வாலையூா், தேன்பாடி கிராமங்களுக்கு காலையும், இரவும் ஒரு நடை அரசுப் பேருந்து சென்று வர ஏற்பாடு செய்துள்ளனா். ஆனால் காலை, இரவு செல்லும் அந்தப் பேருந்துகள் குறிச்சி, வாலையூா், தேன்பாடி ஊருக்குள் செல்லாமல் சிக்காடு மற்றும் புதூா் கிராமம் வழியாக மாற்றுப்பாதையில் செல்கிறதாம். இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
இந்நிலையில் பச்சமலையில் வண்ணாடு, கோம்பை ஊராட்சிகளுக்குப்பட்ட மலை கிராமங்கள் அனைத்துக்கும் பேருந்து வசதி செய்து தரவேண்டும் எனவும், தீபாவளி, பொங்கல் விழா காலங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என்றும் கோரி குறிச்சி, வாலையூா், தேன்பாடி கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் துறையூரிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கோரிக்கை விடுத்தனா்.