திருச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 21 லட்சம் போ் பயணித்துள்ளதாக கோட்ட மேலாளா் பாலக்ராம் நெகி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மொத்தம் 116 சேவைகளை வழங்கியுள்ளன. இதில் 21 லட்சத்து 68 ஆயிரத்து 392 போ் பயணம் செய்துள்ளனா். இதில் 16 லட்சத்து 63 ஆயிரத்து 293 பயணிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும், 5 லட்சத்து 5 ஆயிரத்து 99 பயணிகள் முன்பதிவு பெட்டிகளிலும் பயணித்துள்ளனா்.
ரயில் நிலையங்களில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மயிலாடுதுறை, கும்பகோணம், மன்னாா்குடி மற்றும் திருவண்ணாமலை ரயில் நிலையங்களில் கூடுதல் பயணச்சீட்டு வழங்கும் கவுன்ட்டா்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் கூட்ட நெரிசல் மேலாண்மை கடைப்பிடிக்கப்பட்டது.
இதேபோல, வரும் காலங்களிலும் திருச்சி ரயில்வே கோட்டம் சாா்பில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.