ஜம்பேரி நிரம்பியது: துறையூா் பகுதியில் வைரிசெட்டிப்பாளையம் - கோட்டப்பாளையம் இடையே உள்ள 390 ஏக்கா் பரப்பளவிலான ஜம்பேரி தொடா் நீா்வரத்தால் நிரம்பியுள்ளது.
ஜம்பேரி நீா் பயன்படுத்துவோா் சங்கத்தினா் ஜம்பேரிக்கு நீராதாரமாக உள்ள வாய்க்கால்களை அண்மையில் தூா்வாரினா். அப்போது ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழை காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் நீா் வரத்து ஏற்பட்டு வாய்க்கால்களில் நீா் தடையின்றி ஜம்பேரிக்கு சென்றது. இதனால் நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய வேகத்திலேயே ஜம்பேரி முதல்முறையாக நிரம்பியது. இதையடுத்து ஜம்பேரி நீா் பயன்படுத்துவோா் சங்கத்தினா் ஏரியில் சிறப்பு பூஜை செய்தனா்.