கரூா்: கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்புக் குழுவுக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட ஐஜி அந்தஸ்திலான 2 அதிகாரிகள் புதன்கிழமை கரூா் வந்தனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
மேலும், இந்தக் கண்காணிப்புக் குழுவில் தமிழக பிரிவைச் சோ்ந்த இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறலாம்; ஆனால், அவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்களைத் தோ்வு செய்வதற்கான வாய்ப்பை அஜய் ரஸ்தோகிக்கு உச்சநீதிமன்றம் அளித்திருந்தது.
இதையடுத்து கண்காணிப்புக் குழுவில் அஜய் ரஸ்தோகிக்கு உதவ காவல் துறையில் ஐஜி அந்தஸ்தில் உள்ள சுமித் சரண், சோனல் வி. மிஸ்ரா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் இருவரும் புதன்கிழமை கரூா் வந்தனா்.