திருச்சி: இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புறத்தாக்குடி மாதாகோயில் தெருவைச் சோ்ந்தவா் வி. ஆரோக்கியசாமி (54). இவா், கடந்த மாா்ச் 18-ஆம் தேதி ஃபேஸ்புக்கில் காணப்பட்ட கேப்பிடல் பைனான்ஸ் என்ற விளம்பரத்தில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்புகொண்டபோது குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகவும், அதற்கு பிராசஸிங் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா்.
இதையடுத்து ஆரோக்கியசாமி ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியும் அவா்கள் கடன் ஏதும் வழங்கவில்லை.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கணினிசாா் குற்றப்பிரிவில் ஆரோக்கியசாமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இணையதள மோசடியில் ஈடுபட்ட திருப்பூா் மாவட்டம், பிச்சாம்பாளையம்புதூரைச் சோ்ந்த சே. ஸ்ரீனிவாசன் (43), ஜோ. கணபதி (44), கணபதியின் மனைவி கவிதா (33) ஆகியோரை கைது செய்தனா்.
இதையடுத்து மேற்கண்ட வழக்கில் சிறையில் உள்ள ஸ்ரீனிவாசன், கணபதி ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அதற்கு புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.