வரும் நவம்பா் 20 ஆம் தேதி புதிய கட்சி தொடங்கப்படும் என மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தெரிவித்தாா்.
மல்லை சத்யா தனது ஆதரவாளா்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் திருச்சி ஜங்ஷன் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மல்லை சத்யா பேசுகையில், ``நவம்பா் 20 ஆம் தேதி சென்னையில் புதிய கட்சி தொடங்கப்பட இருக்கிறது. கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவா் செவந்தியப்பன் தலைமையில் 15 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொடி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இதுவரை 15 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு விட்டது.
திராவிடக் கட்சிகளின் மூலதாரமான தென்னிந்திய நல உரிமை சங்கம் 1916 நவம்பா் 20 ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது. இதற்காக தான் அந்த நாளை தோ்வு செய்துள்ளோம். புதிய கட்சியானது மாநில சுயாட்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க நமது இயக்கம் பாடுபடும்’’ என்றாா் அவா்.
கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் யமகுட்டி, காமராஜ், புரட்சி மணி, தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.