போக்குவரத்துக்கு தகுதியற்ற வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை
திருவண்ணாமலை, நவ.7: திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம
திருவண்ணாமலை, நவ.7: திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை 40 கி.மீ தூரம் உடையது. இச்சாலை வழியாக தான் புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பஸ்கள், வாகனங்கள், திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன. அதே போல் போளூர், சேத்துப்பட்டு பகுதிகளில் இருந்து உத்தரமேரூர் வழியாக சென்னை செல்லும் ஏராளமான பஸ்களும் இச்சாலையையை பயன்படுத்துகின்றன.
மேலும் இச்சாலையை ஒட்டி தென்னாங்கூர், மேல்மா, வீரம்பாக்கம், தேத்துறை, கூழமந்தல், பாதிரி, வடநாங்கூர், மாலையிட்டான்குப்பம், புதூர், பெருநகர், ஆக்கூர் உள்பட 25-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவியர் தங்கள் தேவைகளுக்காக வந்தவாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு இச்சாலை வழியாகச் சென்று வருகின்றனர். தென்னாங்கூர் பகுதியில் தற்போது அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் புகழ் வாய்ந்த பாண்டுரங்கசாமி கோயிலும் அமைந்துள்ளது. நாள்தோறும் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
Advertisement
Advertisement
மேலும் இச்சாலையில உள்ள மாங்கால் பகுதியில் தான் செய்யாறு சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஆலை வாகனங்களும் இச்சாலை வழியாகத் தான் இயக்கப்படுகின்றன.
இச்சாலையில் வந்தவாசியில் இருந்து மாங்கால் கூட்டுரோடு வரை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் சாலைவிபத்துகளில் சிக்கி ஏராளமானோர் காயமடைகின்றனர். அரசு பேருந்துகளும் அடிக்கடி பழுதடைந்து நின்று விடுகிஹன்றன. தற்போது பெய்து வரும் தொடர் மழையாலும் இச்சாலை கடும் பாதிப்படைந்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி செய்து தருவது போல் இச்சாலைக்கும் முன்னுரிமை அளித்து சீரமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை உடனே சீரமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.