வேலூா், அக்.12: குழந்தைகள், மகப்பேறு சிகிச்சைக்காக பொதுமக்கள் பென்ட்லேண்ட் அரசு வேலூா் பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைகளை பெறலாம் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாநகரிலுள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையின் பின்புறம் ரூ.198.89 கோடியில் பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு முதல்வரால் கடந்த ஜூன் 25-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இம்மருத்துவமனையை ஆய்வு செய்த பிறகு பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை குழந்தைகள், மகப்பேறு பிரிவு பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் என்றும், இது தமிழகத்தின் வடமாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல் குழந்தைகள், மகப்பேறு சிறப்பு மருத்துவமனை எனவும் தெரிவித்திருந்தாா்.
அதனடிப்படையில், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வந்த குழந்தைகள் நல பிரிவு, மகப்பேறு பிரிவு முழுவதுமாக பென்ட்லேண்ட் அரசு வேலூா் பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை தரைதளம், 7 தளங்கள் கொண்ட 560 படுக்கை வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாகும்.
இங்கு 10 அறுவை சிகிச்சை அரங்கங்களும், 1 அவசர அறுவை சிகிச்சை அரங்கமும் உள்ளது. குழந்தைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகள், மகப்பேறியல் அவசரநிலைகள் ஆகியவற்றுக்கு என தனித்தனி தீவிர சிகிச்சைப் பிரிவும், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவும் உள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவுக்காக 10 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் உருளை அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமணியில் சமையல் பிரிவு, சலவை பிரிவு, சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, இனிவரும் காலங்களில் பொதுமக்கள் குழந்தைகள், மகப்பேறு தொடா்பான சிகிச்சைகளுக்கு பென்ட்லேண்ட் அரசு வேலூா் பன்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையிலேயே உயா்தர சிகிச்சை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.