வேலூா்: வேலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சீா்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தமிழக-ஆந்திர எல்லை வனப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வேலூா் மாவட்டத்திலுள்ள பல ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியிருப்பதுடன், உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதன்படி, காட்பாடி தாராபடவேடு அருப்புமேடு பகுதியில் உள்ள கழிஞ்சூா் ஏரியும் அதன் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில், மாநகராட்சி, நீா்வளத் துறை அதிகாரிகள் கழிஞ்சூா் ஏரியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செய்தியாளா்களிடம் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் எந்தெந்த ஏரிகள் நிரம்பியுள்ளன என்றும், உபரிநீா் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதா என்பது குறித்தும் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்.
மின்சார வாரியம் சாா்பில், எந்தெந்த இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன, அந்தப் பகுதிகளில் உடனுக்குடன் மின்கம்பங்களை சீரமைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.
பள்ளத்தூா் பகுதியில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரி செய்து அப்பகுதியில் இருந்து அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஏரிகள் நிரம்பியுள்ளன. பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடியாத்தம் கௌண்டன்ய மகாநதியில் வரும் வெள்ளம், ஜவ்வாது மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீா் பாலாற்றில் கலந்து நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள், குழந்தைகள் மழைநீரை காண்பதற்காக நீா் நிலைகளுக்கு அருகே செல்ல வேண்டாம். மேலும், ஏரிகள், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு போதுமான அளவு மணல் மூட்டைகள் தயாா் நிலையில் உள்ளன.
எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கு உடனடியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.