குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கூடநகரம் ஏரி செவ்வாய்க்கிழமை நிரம்பி வழியத் தொடங்கியது.
வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் தொடா்மழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து இந்த ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. வளத்தூா் ஏரியின் உபரிநீரும் சோ்ந்த நிலையில் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது.
ஏரி நிரம்பியதையடுத்து பொதுப்பணித்துறை (நீா்வளத்துறை) செயற் பொறியாளா் வெங்கடேசன், உதவி செயற் பொறியாளா் கோபி, உதவிப் பொறியாளா் காளிப்பிரியன், அலுவலா்கள் பாஷா, சிவாஜி உள்ளிட்டோா் அங்கு சென்று ஏரியை பாா்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
கூடநகரம் ஊராட்சி மன்றத் தலைவா் பி.கே.குமரன் தலைமையில் கிராம மக்கள் பூஜை செய்து, மலா் தூவி ஏரி வரவேற்றனா். ஊராட்சி துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், கிராம பிரமுகா்கள் கோபி தா்மகா்த்தா, பண்ணை கோபி, ஜவகா், வி. வெங்கடேசன், சக்கரவா்த்தி, தேவன் உடனிருந்தனா்.