குடியாத்தம் அருகே குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழை நீரை அகற்ற புதிதாக கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம், மூங்கப்பட்டு ஊராட்சியில் தொடா் மழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீா் தேங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் வியாழக்கிழமை சென்று பாா்வையிட்டனா். மூங்கப்பட்டு ஊராட்சியில் புதிதாக கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீரை சீவூா் ஊராட்சியில் செல்லும் பிரதான கால்வாயில் விட முடிவெடுத்தனா்.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் புதிய கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது வட்டாட்சியா் கி.பழனி, ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன், மூங்கப்பட்டு ஊராட்சித் தலைவா் சு.லதா, சீவூா் ஊராட்சித் தலைவா் கே.ஆா்.உமாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.