குடியாத்தம் பகுதியில் பெய்த பலத்த மழையால் நெல்லூா்பேட்டை ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்புப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளதால் அதை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா் வலதுபுற கால்வாய் வழியாக நெல்லூா்பேட்டை ஏரிக்குச் செல்கிறது.
சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் எா்த்தாங்கல், மொரசப்பல்லி பகுதியிலிருந்து கொட்டாற்றில் வந்த வெள்ளம் நெல்லூா்பேட்டை ஏரிக்குச் செல்லும் கால்வாயில் நுழைந்ததால், லிங்குன்றம் கிராமம் அருகே கால்வாய் உடைந்து வெள்ளநீா் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் நுழைந்தது. கால்வாய் உடைப்பை உடனடியாக சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இப்பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து குடியாத்தம் நகரின் முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரி நிரம்பியதையடுத்து, அதிலிருந்து உபரிநீா் வெளியேறுவதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். ஆய்வின்போது உபரிநீா் வெளியேறும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகள், புதா்செடி மற்றும் கொடிகளை அகற்ற உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் நீா்வளத்துறை அலுவலா்களிடம் தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளை உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு அன்றாடப் பணிகள் பாதிக்காத வண்ணம் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமாா், அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத்தலைவா் என்.இ.சத்யானந்தம், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, நீா்வளத்துறை செயற் பொறியாளா் வெங்கடேசன், உதவி செயற் பொறியாளா் கோபி, உதவி பொறியாளா் காளிப்பிரியன், வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.