தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் தொழிலாளர் ஆய்வாளர் புனிதவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தால் பி.ஏ. மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புகள் மற்றும் மாலை நேர பிஜிடிஎல்ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு) ஆகிய பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை 3 ஆண்டு படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சியும், 2 ஆண்டு முதுகலை (எம்.ஏ.) படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ பட்டயப் படிப்பில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றும் தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு இந்தப் படிப்புகள் முன்னுரிமை தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் படிப்புகளில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தொழிற்சாலைகளில் பணியாளர் அலுவலர், மனிதவள அலுவலர் போன்ற பணி வாய்ப்புகள் கிடைக்கும். இக்கல்வி நிலைய மாணவர்களை பல்வேறு நிறுவனங்கள் வளாகத் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை இயக்குநர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண். 5, காமராஜர் சாலை, த.பெ.எண்.2955, சென்னை-600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் அனைத்துப் படிப்புகளுக்கும் ரூ.200. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28440102, 28445778 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.